சீனாவில் ஆண்களின் ஆடைகளை விரும்பி அணியும் பெண்கள் - புதிய மாற்றத்தின் பின்னணி என்ன?

சிறந்த தரம், குறைந்த விலை மற்றும் கூடுதல் வசதி ஆகியவற்றிற்காக ஆண்களுக்கான ஆடைகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாக இளம் சீனப் பெண்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறந்த தரம், குறைந்த விலை மற்றும் கூடுதல் வசதி ஆகியவற்றிற்காக ஆண்களுக்கான ஆடைகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாக இளம் சீனப் பெண்கள் கூறுகின்றனர்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கோடை காலம் நெருங்கியபோது கெக்சின் தனது ஆடை அலமாரியை வரிசைப்படுத்திக் கொண்டிருக்கையில் சில மாற்றங்கள் இருப்பதைக் கவனித்தார். பெண்கள் ஆடைகளைவிட ஆண்கள் ஆடைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஷர்ட்கள், டி-ஷர்ட்கள் மற்றும் அரைக்கால் சட்டைகள் அவரின் காதலனுக்கோ தந்தைக்கோ வாங்கப்படவில்லை. அவையெல்லாம் அவருக்காக வாங்கப்பட்டன.

தனது குடும்பப் பெயரை குறிப்பிட விரும்பாமல் பேசிய கெக்சினைப் போல பலரும் உள்ளனர். அவரின் சமூக வட்டம் மற்றும் இணையத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் சிறந்த தரம், குறைவான விலை, மற்றும் குறைந்த உடல் தோற்றம் குறித்து இழிவுபடுத்துதல் ஆகிய காரணங்களுக்கான ஆண்கள் ஆடைகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்தப் போக்கை உருவாக்குவது எது?

சீனாவில் நுகர்வோர் பொருளாதாரம் பலவீனமாக உள்ள சூழலில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவில் நுகர்வோர் பொருளாதாரம் பலவீனமாக உள்ள சூழலில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ரெட் நோட் என அறியப்படும் பிரபல சீன சமூக ஊடகச் செயலியான ஷாவ்ஹாங்ஷூவில் "ஆண்கள் ஆடைகளை அணியும் பெண்கள்" என்கிற டேக் 82 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. இதற்கிடையே 'பாலின சமத்துவமான ஆடை அணிதல்' என்பது 90 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்த தலைப்பின் கீழ் உள்ள பதிவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. அதிக காட்டன் மற்றும் லினென் உள்ளடக்கம், தெளிவான தையல், பெரிய பாக்கெட்டுகள், இதமான உள்பக்கம், சிறந்த தயாரிப்பு மற்றும் குறைவான விலை போன்ற ஆண்கள் ஆடைகளின் நன்மைகள் குறித்து அதிகம் பேசப்படுகின்றன.

தனது ஆடைகளில் ஏற்பட்ட மாற்றம் 2023-இல் தொடங்கியதாக கெக்சின் நினைவுகூர்கிறார். சீனாவின் உள்நாட்டு டிக்டாக் வடிவமான டோயுன் செயலியில் ஆண்கள் டி-ஷர்டுகளை விற்கும் நேரலைகள் தென்பட ஆரம்பித்தன.

முதலில் அவர் அதை ஆச்சரியமாகப் பார்த்தார். அவர் தனது தந்தை அல்லது காதலனுக்காக எப்போதும் வாங்கியதில்லை. பின்னர் ஏன் இந்தப் பதிவை அல்காரிதம் பரிந்துரைக்கிறது? என அவர் யோசித்தார்.

இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு என கெக்சின் நினைத்துக் கொண்டார். ஒரு நாள் குளியலறையில் இருந்தபோது நேரலை ஒன்றின் மத்தியில் தவறுதலாக தனது போனை ஆன் செய்த நிலையிலே விட்டுவிட்டார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"பெண்கள் இதை சிறிய அளவில் வாங்கி அவர்களே அணிந்துகொள்ளலாம்"

"இது இருபாலருக்குமானது - பெண்களும் இதை அணியலாம்"

இந்த வரிகள் சில நிமிடங்களுக்கான பல முறை திருப்பி சொல்லப்பட்டன.

பொதுவாக பெண்களைக் குறிவைத்த நேரலை ஒளிபரப்புகள் மெலிதாக இருப்பது, குறைகள் என அடையாளம் காணப்பட்டதை மறைப்பது அல்லது மென்மையான, பெண்ணிய தோற்றத்தைக் காண்பிப்பது ஆகியவற்றை மையமாக இருக்கும் நிலையில் இந்த நேரலை துணியின் தரம் மற்றும் பொருட்களை மையப்படுத்தி இருந்தது.

"அது உண்மையில் என்னைக் கவர்ந்தது. பெண்களின் ஆடைகள் ஏன் தொடர்ந்து மையநீரோட்ட அழகு அளவுகோல்களை, குறிப்பாக அதன் வடிவமைப்புகளும் அசௌகரியமாக இருக்கின்றபோது ஏன் அவற்றை தொடர்ந்து திணிக்கின்றன என்பது எனக்கு எப்போதும் புரியவில்லை." என்று அவர் தெரிவித்தார்.

விலையும் உதவிகரமாக இருந்தது. பெரும்பாலான சட்டைகள் 100 யுவானுக்கும் (14 டாலர்; 11 பவுண்ட்) குறைவாக இருந்தது

அவர் தனது முதல் "ஆண்கள்" டி-ஷர்டை வாங்கியபோது ஆச்சரியப்பட்டு போனார். அது மிகவும் சௌகரியமாகவும். கனமாகவும், அவர் அதற்கு முன்னர் மூன்று மடங்கு விலையில் வாங்கிய பெண்கள் ஆடைகளை விட சுவாசிப்பதற்கு இலகுவாகவும் இருந்தது.

ஆண்கள் ஆடைகளை கூடுதலாக வாங்குவதற்கு அவருக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை. அவற்றை அணிவதால் ஏற்படும் அசௌகரியம் என அவர் கணித்த எதுவுமே நிகழவில்லை.

காலப்போக்கில், "அசலானவற்றை ஊடுருவல் இனங்கள் ஆக்கிரமிப்பது போல" இந்த ஆடைகள் அவரின் அலமாரியை ஆக்கிரமித்ததாக அவர் கூறுகிறார்.

குறைவாகச் செலவிடுவது

இந்தப் போக்கு இளம் சீனப் பெண்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.

பட மூலாதாரம், @wangwangsuibingbing

படக்குறிப்பு, இந்தப் போக்கு இளம் சீனப் பெண்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.

சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகள் 2022 இறுதியில் முடிந்த பிறகு அங்கு வலுவிழந்த நுகர்வோர் பொருளாதாரம் நிலவியதன் பின்னணியில் இந்தப் போக்கு வந்துள்ளது.

ஷாங்காயில் காலை 9 முதல் இரவு 9 வரை வாரத்திற்கு 6 நாட்கள் பணி என்கிற கடினமான "996" அட்டவணையில் வேலை செய்யும் கெக்சின் போன்றவர்களுக்கு நிதிசார் எச்சரிக்கை என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

அவர் வேலையை மாற்றுவதில் குறைவான விருப்பமும், ஆடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக அதிகப் பணம் செலவிடுவதில் அதிகத் தயக்கமும் கொண்டிருக்கிறார்.

இந்தப் பின்னணியில் சில வாடிக்கையாளர்கள் "தலைகீழ் நுகர்வு" போக்கை எடுத்துக் கொண்டனர். ஃபேஷன் என்பதைவிட மதிப்பு மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

"ஏதாவது ஒன்று பொருந்தவில்லை என்றால் அதை திருப்பிக் கொடுப்பது எளிதாக இருக்கிறது. ஆடைகளில் அதிகம் செலவு செய்வதில் பொருள் இல்லை என நினைக்கிறேன். ஒரு பருவ காலத்திற்கும் மேல் நான் அரிதாகவே எதையும் அணிகிறேன்," என்றார்.

அளவு தொடர்பான சிக்கல்கள்

சீனா, ஆண்கள் ஆடைகள், பெண்கள்

பலருக்கும் இந்த மாற்றம் பாலினம் தொடர்பாக ஒரு கருத்தை தெரிவிப்பதைவிட நடைமுறைத்தன்மை பற்றியது. சீனாவில் பெண்கள் ஆடைகளில் அதிகம் விமர்சிக்கப்பட்ட அம்சமாக அளவு உள்ளது.

டோயுன் மற்றும் ஷியாவ்ஹோங்ஷு போன்ற சமூக ஊடக தளங்களில் பெரிய அளவு என அறியப்படும் ஆடைகள் எவ்வாறு அரிதாகவே பொருந்துகின்றன என்பதை ஸ்லிம் இன்ஃப்ளுயென்சர்கள் காட்டுகின்றனர்.

ஒரு வைரல் காணொளியில், ஒரு வலைப்பதிவர் தனது பூடில் (poodle) நாய் மீது 'எல்' அளவுள்ள மேலாடையை அணிவிக்கிறார் - அது அதற்குச் சரியாகப் பொருந்துகிறது.

ஷாங்காயைச் சேர்ந்த வழக்கறிஞரான லி, தனது குடும்பப் பெயருடன் அடையாளம் காண வேண்டாம் எனக் கூறிக்கொண்டு பேசுகையில், பெண்களின் ஆடைகள் அரிதாகவே பொருந்துவதால் தான் ஆண்கள் ஆடைக்கு மாறியதாக தெரிவித்தார்.

170 செமீ உயரம் கொண்ட அவர் அகலமான தோள்பட்டைகளைக் கொண்டுள்ளார். அவர் ஐரோப்பாவில் படிக்கின்ற வரை எம் (மீடியம்) அளவு தனக்குப் பொருந்தும் என்பதை உணர்ந்திருக்கவில்லை.

"இங்குள்ள பெண்களுக்கான ஆடைகள் என் உடல்வாகு கொண்டவர்களுக்காகத் தயாரிக்கப்படவில்லை என்று தோன்றுகிறது," என்று அவர் கூறுகிறார்.

ஆண்கள் ஆடைகளின் நடைமுறைத்தன்மையையும் அவர் குறிப்பிடுகிறார்" எம் அளவு கொண்ட ஆண்கள் கால் சட்டைகள் அளவில் சமரசம் செய்து கொள்ளாமல் பாக்கெட்டுகளில் 11 இன்ச் டேப்லட் மற்றும் ஒரு புத்தகம் ஒன்றையும் வைத்துக் கொள்ள முடிகிறது.

"பெண்களுக்கான எந்த ஆடையால் அப்படிச் செய்ய முடியும்? ஒரு லிப்ஸ்டிக்கை கையில் வைத்திருந்தாலே கூட, அது உங்களைப் பருமனாகத் தெரியவைக்கக்கூடும்," என்று அவர் கூறுகிறார்.

தொழில்துறை அழுத்தங்கள்

சீனா, ஆண்கள் ஆடைகள், பெண்கள்

பட மூலாதாரம், @likeke

ஒரு நடுத்தர ஃபேஷன் பிரான்டில் வடிவமைப்பாளராக இருக்கும் வாங்கைப் பொருத்தவரை, அளவு மற்றும் தரம் தொடர்பாக சிக்கலகள் இந்த துறை மீதான பரந்துபட்ட அழுத்தங்களைப் பிரதிபலிக்கின்றன.

பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவின் ஆடைத் துறை கணிசமாகச் சுருங்கியுள்ளது; உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவை சரிவைச் சந்தித்துள்ளன.

சில்லறை வர்த்தக வளர்ச்சி வெகுவாகக் குறைந்து, 2023-ல் சுமார் 15% ஆக இருந்த நிலையில், 2024-ல் வெறும் 0.1% மட்டுமே உயர்ந்துள்ளது.

நிறுவனங்கள் இப்போது குறைவான புதிய வடிவமைப்புகளையே உருவாக்குகின்றன; அதேவேளையில், ஏற்கனவே ஏராளமான ஆடைகளை வைத்திருக்கும் நுகர்வோரும் தங்கள் கொள்முதலைக் குறைத்து வருகின்றனர்.

செலவைக் குறைப்பதற்காக, சில நிறுவனங்கள் இப்போது தங்கள் சொந்த வடிவமைப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆடைகளை வாங்குகின்றன.

ஆனால், இத்தகைய வடிவமைப்புகள் பெரும்பாலும் சீனர்களின் உடல்வாகுக்குப் பொருந்துவதில்லை. இதனால் ஆடைகள் சரியாகப் பொருந்தாமல் போவதுடன், 'குழந்தைகளுக்கான அளவு' கொண்டவை என்று அழைக்கப்படும் வகையிலான பெண்களுக்கான ஆடைகளின் வருகைக்கும் இது வழிவகுக்கிறது.

வடிவமைப்பு தேர்வுகள் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. மெலிதான உடல்வாகு கொண்டவர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்வதற்கு செலவு குறைந்ததாகவும் எளிதானதாகவும் உள்ளன. அதே வேளையில் பெரிய அளவிலான ஆடைகளைத் உற்பத்தி சிக்கலான தையல் முறை மற்றும் கூடுதல் செலவுகள் ஆகின்றன.

"20 பெரிய அளவிலான பொருட்களை விற்பதற்கான செலவும், 200 நடுத்தர அளவிலான பொருட்களை விற்பதற்கான செலவும் சமமாக இருந்தால், நிறுவனங்கள் பெரிய அளவிலான பொருட்களை விற்பதை நிறுத்திவிடும்," என்று வாங் கூறுகிறார்.

துணிக்கான செலவுகள் தற்போது வெகுவாக அதிகரித்து வருவதால் உற்பத்தியாளர்கள் மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகக் குறிப்பிடும் அவர், இதன் விளைவாக வரும் ஆண்டில் இன்னும் மெல்லிய துணிகளே சந்தைக்கு வரக்கூடும் என்றும் எச்சரிக்கிறார்.

கெக்சின் போன்றவர்களுக்கு இது ஏற்கெனவே அரங்கேறி வரும் மாற்றத்தை மேலும் துரிதப்படும்.

கூடுதல் செய்தி சேகரிப்பு - லூயிஸ் பர்ருச்சோ

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு